இணையதளத்தின் விவரம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.அவனே இவ்வுலகை அழகாக படைத்து அதில் ஒவ்வொன்றும் முறையாக இயங்க வழி வகுத்தான். அவனே இவ்வுலகில் எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கி, அவற்றை மனிதன் முறையாக அனுபவிக்கும் வழிகளையும் கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனைப் படைத்து, உண்மையான மனித இயல்போடு வாழ்வதற்கு தூதர்களையும் வேதங்களையும் அனுப்பி நம்மைச் சீர்படுத்தினான். அவனே இவ்வுலகில் அவன் விரும்பிய முறைப்படி வாழ்வோருக்கு இம்மையில் நேர் வழியையும், மறுமையில் எந்தக் கண்ணும் கண்டிராத, எந்த செவிகளும் கேட்டிராத, எந்த உள்ளங்களும் கற்பனைக் கூட செய்ய முடியாத அளவிற்கு அற்புதங்களையும் இன்பங்களையும் ஏற்படுத்தி வைத்துள்ளான். அவனைப் புழ்ந்த பின்….
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எனது நண்பர் ஒருவர் இணையதளம் உருவாக்கும் முறைப் பற்றிக் கற்றுக்கொள்ளுமாறு எனக்கு அறிவுறுத்தினார்கள். அல்லாஹ்வின் அருளால், நான் அதை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். பின்னர், சில அரபு மொழி இஸ்லாமிய இணையதளங்களைப் பார்த்தபோது, நாமும் தமிழில் இதுபோன்ற ஒன்றை உருவாக்கலாம் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதற்காக, நான்குத் தலைப்புகளை தேர்ந்தெடுத்தேன்.
தலைப்பு 1 குர்ஆன் : நம்மில் பலர் குர்ஆன் ஓதும் வழக்கம் கொண்டவர்கள். அவ்வப்போது தமிழ் மொழிபெயர்ப்பையும் வாசிக்கும் வழக்கம் நம்மிடம் உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! எனினும், அதன் விளக்கங்களை சுருக்கமாகக் கூறினால், முதலில் எனக்கும் பிறகு மற்றவர்களுக்கும் பயனளிக்கும் என்று நான் நினைத்தேன். இதன் படி குர்ஆன் வசனங்களுக்கு அறிஞர்களின் சுருக்கமான விளக்கத்தை வழங்க விரும்புகிறேன்.
தலைப்பு 2 ஹதீஸ் : நாம் ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட முறையிலும் பள்ளிகளிலும் வீடுகளிலும் நபி மொழிகள் வாசிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ் ! எனினும், அதன் விளக்கங்களை சுருக்கமாகக் கூறினால், முதலில் எனக்கும் பிறகு மற்றவர்களுக்கும் பயனளிக்கும் என்று நான் நினைத்தேன். எனவே, நபி மொழிகளுக்கு அறிஞர்களின் சுருக்கமான விளக்கத்தை வழங்க விரும்புகிறேன்
தலைப்பு 3 நபி (ஸல்) வரலாறு : ஈருலகில் வெற்றி பெற நபி பற்றிய அறிவு அவசியமாகும். ஒவ்வொரு நாளும் உலகில் நடக்கும் பல செய்திகளையும், பல நபர்கள் பற்றியும் அறிந்திருக்கிறோம். அவை அனைத்தையும் விட நபி (ஸல்) பற்றி அறிவது மிக அவசியமானதாகும் . காரணம் மண்ணறையில் நமக்குக் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று, “உனது நபி யார்?” என்பதாகும். நபியைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பதன் மூலமே மண்ணறையில் வெற்றி பெற முடியும் என்பதில் சந்தேகமில்லை . எனவே நபியைப் பற்றிய சில தகவல்களை கூறுவதன் மூலம் முதலில் நானும், பின்னர் மற்றவர்களும் பயனடைவார்கள் என்று எண்ணி “நபிவரவாறு ” என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.
தலைப்பு 4 பாவங்கள்: மனிதர்கள் அனைவரும் பாவம் செய்பவர்கள்தான். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக ! பாவங்கள் பல இருந்தாலும் அவைகளில் பெரும் பாங்களை விட்டு விலகி இருப்பது மிகவும் முக்கியமானதாகும் அவைகளை சில அறிஞர்கள் அவை மொத்தம் 70 என்றும், இன்னும் சில அறிஞர்கள் 100 என்றும், மேலும் சில அறிஞர்கள் அதற்கு மேலும் இருப்பதாக கூறுகிறார்கள்.
எனவே, பாவங்களைப் பற்றி எழுதுவதன் மூலம், முதலில் நானும் பின்னர், மற்றவர்களும் பாவங்களிலிருந்து விலகியிருப்பதற்காக “பாவங்கள்” என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.
உயர்ந்தோன் அல்லாஹ், நமக்கு அளித்த மார்க்கத்தை நாம் நன்கு அறிந்து, அவனது நெருக்கத்தை அடைய உதவி செய்வானாக!
மேலும் இதில் உள்ள விளக்கங்கள் அனைத்தும் பல்வேறு அறிஞர்களின் நூல்களில் இருந்து பெறப்பட்டவை. ஒவ்வொரு விளக்கத்திற்கும் ஆதார நூல்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன:
1. இதில் இடம் பெறும் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அமைந்தவை. எனவே, நமது சுயகருத்துக்களோ, மார்க்க அறிவில்லாதவர்களின் கருத்துக்களோ இதில் இடம்பெற்று விடக்கூடாது
2 இதை பார்வையிடும் அறிஞர்கள் ஏதேனும் தவறுகளைக் கண்டால்,
அவற்றை சுட்டிக்காட்டுவதன் மூலம், அவற்றை திருத்தம் செய்ய இலகுவாக இருக்கும்.
எனது இந்த இணையதளம் உருவாவதற்கு பல வகையில் உதவியாகவும் ஊக்கமளித்த அல் ஹாஃபிழ் முஃப்தி தமீமுல் அன்சாரி பாகவி
அவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கிய சகோதரர் ஹாஃபிழ் அபூ ஹுனைஃப் யூனுஸ்
அவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் இம்மை மறுமையின் எல்லா நலவுகளையும் அல்லாஹ் தந்தருள்வானாக! இந்த இணையதளம் நன்மையான காரியங்களில் தோய்வின்றி நடைபெற உதவி செய்வானாக! இந்த இணையதளம் உம்மத்தில் நன்மைகளை விதைத்து, அவற்றை வளர்க்க அல்லாஹ் உதவி செய்வானாக!
இப்படிக்கு: அபூ அப்தில்லாஹ் முஹம்மத் ஹுசைன் பின் ஜமால் முஹம்மத் காஷிஃபீ