وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ
`இன்னும் அவர்கள் வீணான விஷயத்தை விட்டும் விலகியிருப்பார்கள்."
முந்திய வசனத்தில், “வெற்றியாளர்கள் தங்களின் தொழுகையை உள்ளச்சத்தோடு நிறைவேற்றுவார்கள்” என்று சொன்ன பிறகு, அந்த முறையில் தொழுகையை நிறைவேற்றினால் அவர்களுக்குள் அது எவ்வகையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இவ்வசனத்தில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான். அவர்களது உள்ரங்கம் சீராக இருந்ததினால், வெளிரங்க வாழ்க்கையும் சீராக அமைத்துக் கொண்டார்கள் என்பதை இவ்வசனம் குறிப்பிடுகிறது.
(نظم الدرر – للبقاعي)
இந்த வசனத்தில் நம்பிக்கையாளர்களின் மூன்றாவது தன்மையை அல்லாஹ் குறிப்பிடுகிறான். அவர்கள் இம்மை மறுமைக்கு பயனளிக்காத தேவையில்லாத எல்லா சொல், செயல்களை விட்டும் ஒதுங்கி இருப்பார்கள், தேவையில்லாத விஷயங்கள் ஆகுமானதாக இருந்தாலும், அவை ஈமான் கொண்டவர்களின் உயர்வான பண்பிற்கு மாற்றமாக இருப்பதினால் அவற்றை விட்டும் தங்களது நாவையும் (அங்க அவயங்களையும்) இதர உறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்வார்கள். அப்படியானால் அல்லாஹ் வெறுக்கின்ற, மார்க்கத்தில் தடுக்கப்பட்ட, அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசுதல், அவதூறாகப் பேசுதல், கிண்டல், பரிகாசம் செய்தல், அடுத்தவர்களுக்கு கோபத்தை உண்டாக்குதல், போன்ற எல்லா காரியங்களை விட்டும் முற்றிலுமாக வெகு தூரமாக இருப்பார்கள்.
( سعدي)
குறிப்பாக, தொழுகை நேரங்களில் தேவையில்லாத எல்லா விதமான சொல், செயல்களை விட்டும் அதிமுக்கியத்துவத்துடன் விலகி விடுவார்கள்.
فتح القدير
இந்த வசனத்தின் மூலம் தற்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்துகின்ற அலைபேசிகள், கணினிகள், இதுபோன்ற சாதனங்களை இம்மைக்கும் மறுமைக்கும் பயனில்லாத காரியங்களில் பயன்படுத்துவது, வெற்றி பெற்ற நம்பிக்கையாளர்களின் தன்மைகளுக்கு மாற்றமானது என்பது தெரிய வருகிறது. (அல்குர்ஆன் ததப்பருன் வ அமலுன் )
நம்பிக்கையாளர்களின் உயர்வான பண்புகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதைப் போலவே, சூரா ஃபுர்கான்: 72 மற்றும் சூரா கசஸ்: 55 போன்ற மற்ற பகுதிகளிலும் கூறப்பட்டுள்ளன.
குர்ஆனில் கூறப்பட்டுள்ள வெற்றியாளர்களின் மூன்றா் தன்மையை நாமும் அடைய அல்லாஹ் உதவி செய்வானாக!