اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏

பிற மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவிவிட்டு உங்களை நீங்கள் மறந்து விடுகின்றீர்களா? நீங்களோ வேதத்தை ஓதிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் சிறிதளவும் (இதைப் பற்றி) சிந்திப்பதில்லையா?

இந்த வசனத்தில் மார்க்கக் கல்வியை கற்று அதன் படி தான் நடப்பதைப் பற்றி சிந்திக்காமல் பிறருக்கு ஏவுவதில் மட்டும் கவனம்  வைப்பவரைக் கண்டித்துக் கூறப்பட்டுள்ளது. 

ஒருவர் இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்களிடம் வந்து, “இப்னு அப்பாஸ் அவர்களே! நான் (மக்களுக்கு) நன்மையை ஏவி, தீமையில் இருந்து (அவர்களைத்) தடுக்க விரும்புகிறேன்” என்று கூறினார். அதற்கு  அவர்கள், “நீர் அதற்கு தகுதி பெற்றுவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “(தகுதி  பெற்றிருப்பதாகக்) கருதுகிறேன்” என்று கூறினார்.

அதற்கு அவர்கள் அந்த மனிதரிடம், “அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள மூன்று வசனங்களின் மூலம் இழிவடைவதை நீர் அஞ்சவில்லையாயின் அவ்வாறு செய்து கொள்ளலாம்” என்று கூறினார்கள். “அந்த வசனங்கள் யாவை?” என அவர் கேட்டார். 

அதற்கு இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள்: 

“உங்களை மறந்துவிட்டு, நன்மை செய்யுமாறு ஏவுகிறீர்களா?” (2:44) எனும் அல்லாஹ்வின் கூற்று முதலாம் வசனமாகும். “இதை (மனத்தில்) நன்கு பதித்துக்கொண்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இல்லை’ என்று பதிலளித்துவிட்டு, ‘இரண்டாம் வசனம் என்ன?’ என்று கேட்டார். 

அதற்கு இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள், “நீங்கள் செய்யாதவற்றை நீங்கள் சொல்வது அல்லாஹ்விடம் மிகுந்த கோபத்திற்குரியதாகும்” (61:2,3) எனும் அவல்லாஹ்வின் கூற்றாகும். “இதை (மனத்தில்) நன்கு பதித்துக்கொண்டீரா” என்று கேட்டார்கள். அதற்கும் அவர் ‘இல்லை’ எனக் கூறிவிட்டு, ‘மூன்றாம் வசனம் என்ன? என்று கேட்டார்.

அதற்கு இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள், “எவற்றைச் செய்ய வேண்டாம் என்று உங்களை நான் தடுக்கின்றேனோ அவற்றை நான் செய்வதற்கு ஒருபோதும் விரும்பமாட்டேன். என்னால் முடிந்த வரை சீர்திருத்தம் செய்யவே நான் விரும்புகின்றேன்” என்று நல்லடியார் ஷுஐப் (علیه السلام) அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கும் வசனம் (11:88) ஆகும். இதை (மனத்தில்) நன்கு பதித்துக்கொண்டீரா? என்று கேட்டார்கள். அதற்கும் அவர், ‘இல்லை’ என்றே கூறினார். அப்படியானால், “உன்னிலிருந்தே (சீர்திருத்தப் பணியைத்) தொடங்கு” என்று அந்த மனிதரிடம் இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள் கூறினார்கள்.

இந்த வசனத்தில் அறிஞர்களின் கடமையை பற்றி கூறப்பட்டுள்ளது கடமைகளில் இரண்டில் ஒன்றை அவர்கள் விடுபட்டாலும் தவறு செய்ததாகவே கருதப்படுவர் நன்மையான  செயல்களை ஏவுவதும் அதை தனது வாழ்வில் கொண்டு வருவதும் கடமையாகும் இவைகளில் மற்றவருக்கு ஏவுவதை மட்டும் நிறைவேற்றிவிட்டு தனது வாழ்வில் எடுத்து நடக்காமல் இருப்பது தவறான செயலாகும் என்பது இதன் கருத்தாகும்   (தஃப்ஸீர் உஸைமீன் – அல் குர்ஆன் ததஃப்பருன் வ அமலுன்)

இந்த வசனத்தில் இப்னு அப்பாஸ் இறுதியாக சீர்திருத்தப் பணியைத் தடுக்கவில்லை மாறாக முதலில் நம்மை சீர்திருத்திக் கொண்டு பின்பு மற்றவரை கவணிக்கவும்  என்றே கூறியுள்ளார்கள்.

எனவே நாம் முதலில் நம்மை சீர்த்திருத்திக் கொள்வதற்கும்  பின்னர் மற்றவர்களை சீர்திருத்தவும் அல்லாஹ்விடம் உதவி கேட்போமாக!

0
Would love your thoughts, please comment.x
()
x