«إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، »

உமர் (ரலி )அவர்கள் கூறியது : இறை தூதர்( ஸல்) அவர்கள் கூறினார்கள், செயல்கள் எல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன.ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் எண்ணுவதெல்லாம் கிடைக்கிறது.  (நூல் : புஹாரி 1)

இந்த இடத்தில் இரண்டு வாசகங்கள் கூறப்பட்டுள்ளன.

1 செயல்கள் எல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன

இமாம் ஷாஃபி கூறுகிறார்கள் மார்க்க சட்ட நூல்களில் சுமார் 70 க்கும் அதிகமான பாடங்களை இந்த நபிமொழியின் கீழ் இணைக்கப்படும்.

இன்னும் சில அறிஞர்கள் கூறுகையில் 100 நூல்கள் எழுதப்பட்டாலும் அவை  ஒவ்வொன்றின் முன்னுரையிலும் இந்த நபிமொழி இடம் பெரும் அளவிற்கு இது  முக்கியத்துவம் வாய்ந்த நபிமொழியாகும் . (ஷரஹ் அர்பயீன் – அதிய்யா)

இந்த நபிமொழியின்  மூலம் ஒரு வணக்கத்தை அல்லது நற்செயலை அல்லாஹ்வின் பொருத்ததைப் பெற்றுத் தரும்  என்ற எண்ணத்துடன் செய்தால் மட்டுமே அதற்குரிய நன்மை கிடைக்கும். மேலும் உலக நன்மையை மட்டும் நோக்கமாக கொண்டு அவற்றை செய்தால் அவற்றுக்குரிய நன்மை கிடைக்காது என்பதை இந்த அறிவிப்புக் கூறுகிறது. (ஷரஹ் அர்பயீன் – இஃப்னு உஸைமீன்)

இந்த நபிமொழியில் நாம் புரிந்துக் கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம். ஒரு தீமையை செய்வதற்கு விருப்பமும் நாட்டமுமின்றி நிர்பந்த சூழ்நிலையில் தீமை செய்தால் அதற்கு குற்றம் எழுதப்படாது. ஏனெனில் செயல்கள் எல்லாம் எண்ணத்தைப் பொறுத்தே அவற்றிர்க்கான பிரதிபலன்கள் கொடுக்கப்படும். உதா : குர்ஆனில் சில பாவங்களைப் பற்றிக் கூறும் போது அவற்றை நிர்பந்த சூழ்நிலையில் செய்துவிட்டால் குற்றமாகாது என்று அல்லாஹ் கூறுவதைப் பார்க்கலாம்.  

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் அவனை மறுப்பவர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும் என்றும் அத்தகையோருக்குக் கடும் வேதனை உண்டு. என்றும் சொல்லும் அல்லாஹ் இறை நம்பிக்கையில் உள்ளம் அமைதிக் கொண்ட நிலையில் நிர்பந்தத்தின் காரணமாக இறை நிராகரிப்பு வார்த்தையை சொல்லி விட்டால் குற்றமில்லை என்று அல்லாஹு தஆலா அனுமதி அளிக்கிறான். ( அல்  குர்ஆன்16:106)    (ஷரஹ் அர்பயீன் அதிய்யா ஸாலிம்)

அதே போல் உண்ண தடை செய்ய பட்டவற்றை  நிர்பந்த சூழ்நிலையில் உண்டு விட்டால் பாவம் இல்லை என்றும் அல்லாஹ் கூறி உள்ளான். (அல்குர்ஆன்  2 : 171)

2 ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் எண்ணிவுவதெல்லாம்  கிடைக்கிறது. 

இந்த வாசகத்தின் மூலம் ஒருவர் ஒரே ஒரு செயலை பல நற்செயல்களை அவர் நாடினாலும்  அவை ஒவ்வொன்றிர்க்கும் தனித்தனியான நன்மைகள் கிடைக்கும் என இதன் மூலம் தெரியப்படுகிறது. உதா: ஒருவர் பள்ளிக்கு தொழுகைக்காக  செல்கிறார். அதில் ஜமாத் தொழுகைக்காகவும்  அங்கு சென்று குர்ஆன் ஓதுதல் ,திக்ர் செய்தல் (அங்கு முஸ்லிம்களை சந்திப்பதையும் அங்கு வரும் நோயாளியை நலம் விசாரிப்பது நண்பர்களை இன் முகத்துடன் சந்தித்தல் மஸ்ஜிதின் காணிக்கை தொழுதல்) போன்ற பல நற்செயல்களை எண்ணி சென்றால் அவை அனைத்திற்கும் தனித்தனியான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரிய வருகிறது (ஷரஹ் அபீதாவூத் – அப்துல் முஹ்ஸின்) 

அடுத்து  ஒருவர் ஒரு செயலை நல்ல நோக்கத்தோடு செய்யும் பொழுது அது அவருக்கு மறுமையில் நன்மையை அடைவதற்கும் அதே செயலை அவர்  வேறு நோக்கத்தோடு செய்யும் பொழுது நன்மையை இழப்பதற்கும் காரணமாகும் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் விவரிக்கிறார்கள்

ஹிஜ்ரத் என்பது இஸ்லாத்தில் முக்கியமான ஒரு வணக்கமாகும் ஆனால் அது சில சமயம்  அல்லாஹ்வுக்காகவும் சில சமயம் சுய தேவைக்காகவும் நடக்கிறது. ஒரு சிற்றூரில் இஸ்லாத்தை ஏற்கும் ஒருவர் தன்னைச் சுற்றியுள்ள  இஸ்லாத்தை வெறுப்பவர்களின் தொல்லையினால் இஸ்லாமிய சூழலுள்ள ஒரு பகுதிக்குக் குடியேறுகிறார். அதே சிற்றூரிலிருந்து இன்னொரு முஸ்லிம் அதே பகுதியில் தொழில் செய்வதற்காக குடியேருகிறார். இருவரும் ஒரே பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வேரொரு பகுதிக்கே  சென்றாலும் முதலாமவரின் நோக்கம் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக என்ற நிலையில் இருப்பதினால் அதற்கு மறுமையில் சிறப்பான  நன்மைகள் கண்டிப்பாக கிடைக்கும். இரண்டாமவரின் நோக்கம் உலக நன்மையை பெறுதல் என்ற நிலையில் இருந்ததினால் .அவருக்கு அவர் எதிர் பார்க்கும் உலக நன்மை மட்டுமே கிடைக்கிறது மறுமையில் சிறப்பான  நன்மைகளை இழந்துவிடுகிறார். இந்த நபிமொழி படி வணக்க வழிபாடுகள் ஏற்கப்படுவதற்கு உள்ளத்தில் எண்ணம் வைப்பது அவசியமாகும். شرح رياض الصالحين – عثيمين 

எனவே நமது எல்லா செயல்களையும் அல்லாஹ்விற்காக மட்டும் செய்யவும் ஒரு நற்காரியம் செய்தாலும் அதன் மூலம் பல நல்லெண்ணங்கள் வைக்க முயலவோமாக ! 

0
Would love your thoughts, please comment.x
()
x