وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَ‌ۘ‏

(நம்பிக்கையாளர்கள்) அவர்கள் தங்கள் தொழுகைகளையும் (சரியான நேரத்தில் தவறாது) கடைப்பிடித்து நிறைவேற்றுவார்கள்..

பிர்தௌஸ் என்ற சொர்க்கத்திற்கு உரியவர்களாக கருதப்படும் வெற்றி பெற்ற நம்பிக்கையாளர்கள், தங்களது தொழுகைகளை நபிகளார் காண்பித்த முறையில் (அதன் கடமைகளையும் நிபந்தனைகளையும்,ஒழுக்கங்களையும்) பேணுவதுடன் அதற்குரிய நேரத்தில் பள்ளிகளில் சென்று ஜமாஅத்தாக நிறைவேற்றுவதிலும் கவனமாக இருப்பார்கள்.          أضواء البيان

நம்பிக்கையாளர்களின் பண்புகள் பல இருந்தாலும் இஸ்லாத்தில் தொழுகை மிகவும் தலையான கடமையாகும். எனவே தான் அவர்களின் பண்புகளில் இதை ஆரம்பத்திலும் இறுதியிலும் கூறப்பட்டுள்ளது.   نظم الدرر

இங்கு நம்பிக்கையாளர்களின் தொகழுகையில் இரு வித தன்மைகள் கூறப்பட்டுள்ளன. 1 தொழுகையை உள்ளச்சத்துடன் நிறைவேற்றுவது. (அதன் விவரம் முன்பு கூறப்பட்டுள்ளது) 2 உள்ளச்சமுள்ள தொழுகையை, விடாமல் தொடர்படியாக கடைப்பிடிப்பார்கள் என்பதாகும். எனவே தொழுகையாளிகள்  இவ்விரு தன்மைகளில் ஒன்றை இழந்துவிட்டால் அவர் பழிப்பிற்குரியவராவார்.     تفسير سعدي

ஒரு நாள் நபி அவர்களிடம் தொழுகை பற்றி கேட்கப்பட்டது அப்போது அவர்கள் கூறினார்கள் :  தொழுகையில் பேணுதலாக இருப்பவருக்கு அது ஒளியாகவும், ஆதாரமாகவும், மறுமையில் அவரின் வெற்றிக்குக் காரணமாகவும் அமையும். அதை பேணுதலாக கடைபிடிக்காதவருக்கு ஒளியாகவும், ஆதாரமாகவும் இருக்காது. இன்னும் மறுமையில் வெற்றியை இழந்து இஸ்லாத்தின் கொடிய விரோதிகளான காரூன் ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவருடன் எழுப்பப்படுவார்.    مسند أحمد

தொழுகையின் மூலம் கிடைக்கும் பயன்கள்
1 ஒருவர் தொழுகையை உள்ளட்சத்தோடு நிறைவேற்றும் பொழுது அல்லாஹ்வின் கண்ணியத்தை உணர்கிறார்.
2  ஒருவர் தொழுகையை உள்ளச்சத்தோடு நிறைவேற்றினால் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகிறது.
3  தொழுகையை முறையாக நிறைவேற்றினால் அவரது உள்ளத்திற்கு அமைதியும் புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது.
4  உள்ளச்சத்தோடு நிறைவேற்றப்படும் தொழுகையின் மூலம் உலகம், நம்பிக்கையாளர்களுக்கு சிறைச்சாலை தான் என்ற உணர்வு ஏற்படுகிறது.
5 உடற்பயிற்சியின் மூலம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதைப் போல் உள்ளச்சத்தோடு நிறைவேற்றும் தொழுகையின் மூலம் உள்ளத்திற்கும், உயிருக்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது.
6  தொழுகையை முறையாக நிறைவேற்றினால் வெளிரங்கம் சீராக அமைவதைப் போல் அவரது உள்ரங்க வாழ்வும் சீராக அமைந்துவிடும்.
7  தொழுகையின் மூலம் நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் தூய்மை பரவ வாய்ப்பு ஏற்படுகிறது.
8 அனைத்து முஸ்லிம்களும் அல்லாஹ்விற்கு கட்டுப்படு தொழுகையில் ஒரே திசையை முன்னோக்குவது போன்று நமது உள்ளங்கள் அவனின் அனைத்துக் கட்டளைகளுக்கும் அடிபணிவதை உணர்த்துகிறது.

9 முஸ்லிம்கள் தொழுகையில் ஒரே குடும்பமாக முன்னோக்குவது போல் எல்லா சந்தர்பத்திலும் நாம் ஒரே குடும்பமாகும். எனவே நாம் ஒருவர் மற்றவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
10  உள்ளச்சத்தோடு ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுகையை நிறைவேற்றும் பொழுது நமது உள்ளம், நாவு, மற்றும் இதர உறுப்புகளும் முறைதவறி பயன்படுத்துவதிலிருந்தும், அல்லாஹ்வின் நினைவை விட்டும் மறந்திருப்பதிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.
10 தொழுகை மனிதனுக்கு கிடைத்த ஒரு மகத்தான ஆன்மீக சக்தியாகும் இது அவரை நன்மையான செய்திகளின் பால் ஆர்வமூட்டவும் தீமைகளிலிருந்து விலகி இருக்கவும் வழிவகுக்கிறது.   نضرة النعيم في مكارم أخلاق الرسول الكريم ٦/٢٥٨٤

வெற்றியாளர்களின் ஏழாம் தன்மையைப் போல் எல்லா தொழுகையையும் பேணுதலாக குறித்த நேரத்தில் பள்ளிக்குச் சென்று நிறைவேற்ற அல்லாஹ் உதவி செய்வானாக!

0
Would love your thoughts, please comment.x
()
x