وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
புவி எங்கும் பரவியிருந்த காரிருளில் மின்னிக் கொண்டிருக்கும் வெள்ளிகளைப் போல் ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றிருந்த ஹனீஃபுகள் என்போர் ஆங்காங்கே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முன்னறிவிப்பு செய்யப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்களை தேடிக் கொண்டிருந்தார்கள்.
அதே சிந்தனையிலேயே நமது நபி (ஸல்) அவர்களும் ஓரிறைக் கொள்கையை நிலை நாட்ட முயற்சித்து அதில் மாபெரும் வெற்றி கண்டார்கள். ஆனால் முந்திய ஹனீஃப்களில் பலர் ஓரிறைக் கொள்கையை தேடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு சிலர் யூதர்களாகவும், சிலர் கிருத்துவர்களாகவும், சிலர் தமது தீய தோழமையின் காரணமாகவும் சிலர் பெருமையின் காரணமாக நபி (ஸல்) அவர்களை எதிர்த்ததையும் முன்பு கண்டோம். ஆனால் நபியவர்களோ அனைவருக்கும் மாற்றமாக தாம் நேர்வழியில் இருப்பதோடு முழு உலகத்தையும் நேர்வழியில் வழி நடத்துபவர்களாகத் திகழ்ந்தார்கள்.
மற்ற ஹனீஃபுகளைக் காட்டிலும் நபிகளார் (ஸல்) பலவிதங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளார்கள். மற்ற ஹனீஃப்கள் யாவரும் ஓரிறைக் கொள்கையில் அல்லாஹ்வை அடைகிறோம் என்று சொல்லிக்கொண்டு முழுமையாக குடும்பத்தையும் மக்களையும் விட்டும் ஒதுங்கி வாழ்ந்தார்கள். ஆனால் நமது நபி அவர்களோ ஓரிறைக் கொள்கையை நிலை நாட்டுவதோடு சமூக மக்களுடன் ஒன்று சேர்ந்து அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்தார்கள்.
சந்நியாசிகளில் சிலர் தம்மை வருத்திக் கொள்வதில் தான், இறை நெருக்கம் இருக்கிறது என்று கூறி பல பொதிசுமைகளை சுமந்துக் கொண்டு ஊர்சுற்றியுள்ளார்கள்.
மக்காரியஸ் என்ற சந்நியாசி ஆறு மாதங்கள் வெற்றுத்தரையில் ஆடையின்றி உறங்கினார் என்றும் “செம எஸ்டெர்லைட்” என்பவர் ஈஸ்டர் பெரு நாளைக்கு முன் 40 நாட்கள் தொடர்ந்து நோன்பு இருந்தார் மேலும் அவர் தன் உடலை வருத்திக் கொண்டதால் உடலெல்லாம் சீழ் வடிந்து புழுக்கள் உருவாகி இருந்தபோது அப்புழுட்களை பார்த்து, கடவுள் உனக்குத் தந்த உணவை சாப்பிடு” என்று கூறுவார். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான ‘நைலஸ்’ என்ற சந்நியாசி தன் மனைவி, மக்கள் கதறக் கதற அழுத நிலையில் உலக வாழ்வை துறந்து தனிமை தியானத்திற்கு திரும்பினார் என்றும் சரித்திரம் கூறுகின்றது.
அதே நேரம் மற்றொருபுறம் சில சந்நியாசிகள் மக்களிடம் மன்னிப்பை பெற்று தருகிறோம் என்று கூறி அன்பளிப்புகளை வாங்கிக் கொண்டு பேரரசர்களைப் போல் ஆடம்பரமான வாழ்க்கையும் வாழ்ந்துள்ளார்கள்.
மேல் குறிப்பிட்ட அனைவருக்கும் மாற்றமாக இயற்கையோடு இனைந்து நடுநிலையான வாழ்க்கை முறையை இந்த மனித சமூகத்திற்கு வழங்குவதற்காக அல்லாஹ் நமது தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தேர்ந்தெடுத்தான்.
நபி (ஸல்) வரலாறு 134-140