وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ

திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாய மக்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் உங்களுக்கு வேறு யாரும் இல்லை. நீங்கள் அஞ்சமாட்டீர்களா?”

அப்போது (அவரை) நிராகரித்துவிட்ட அவருடைய சமூகத்தாரில் உள்ள தலைவர்கள் “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை, (எனினும்) இவர், உங்கள் மீது சிறப்புப்பெற நாடுகிறார், மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் மலக்குகளைத் திட்டமாக இறக்கி வைத்திருப்பான், முன்னுள்ள நம் மூதாதையர்களிடம், இதனைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதேயில்லை” என்று கூறினார்கள்.

“இவர் ஒரு பைத்தியக்கார மனிதரே தவிர வேறில்லை, ஆகவே சிறிது காலம்வரை இவரை எதிர்பார்த்திருங்கள் (என்றும் கூறினார்கள்.)  (வசனம் 21-25)

இந்தத் தொடரில் மனிதனை படைத்ததையும் அவனுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கொடுக்கப்படும் எண்ணற்ற வெகுமதிகளையும்  கூறியதற்கு பிறகு அவன் மறு உலக வாழ்விற்க்காகவே படைக்கப்பட்டுள்ளான் என்ற சிந்தனையை அவனுக்கு ஊட்டினான். இந்த செய்தியை தான், நபியவர்கள் (ஸல்) உங்களுக்கு உபதேசம் செய்கிறார்கள். நீங்களோ அவரை பொய்ப்பிக்கிறீர்கள். இதற்கு முன் வாழ்ந்த முக்கிய முதல் தூதரான நூஹ் நபியின் சமூகம் பொய்ப்பித்தனர் இறுதியில் அவர்கள் பேரழிவில் மாய்ந்து சென்றனர் என்ற சரித்திரத்தை இங்கு நினைவு கூறுகிறான். குர்ஆனிலுள்ள அத்தியாயங்களின் அமைப்புகள் இதே முறையில் அமைந்திருப்பதை நாம் காண முடிகிறது.

அல்லாஹ் கூறுகிறான் நூஹ் நபியை தனது சமூகத்தை ஏகத்துவத்தின்பால் அழைப்பதற்காக அனுப்பி வைத்தோம் அவர்கள் தனது சமூகத்தவரிடம் வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அவன் மட்டுமே அவனைத் தவிர்த்து எவரும் வணங்கப்பட தகுதியற்றவர்கள் எனவே அவனையும் அவனது வேதனையயும் அஞ்சிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு சமூகத்தின் தலைவர்களும் செல்வந்தர்களும் நூஹைப் பொய்ப்பித்தனர். அதோடு தனது சமூகத்தின் பாமர மக்களுக்கு இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே. அவர் சொல்வதைப் போல் தூதுவரில்லை. மேலும் உங்களிடம் செல்வாக்கை பெற வேண்டும் என்பதற்காகவே தன்னை தூதுவர் என்று வாதிடுகிறார். உண்மையில் அல்லாஹ் ஒரு தூதுவரை அனுப்ப வேண்டும் எனில் நமக்கு வானவர்களை தூதுவராக அனுப்பி இருப்பான். நாமும் நமக்கு முன் எத்தனையோ சமூகத்தவர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். எந்த ஒருவரும் இவர் சொல்வதைப் போல் ஒரு மனிதரை தூதுவராக அனுப்புவான் என்று கேள்விப்பட்டதில்லை. இவருக்கு (நூஹுக்கு) பைத்தியம் பிடித்திருக்கின்றது எனவே அவருக்கு பைத்தியம் தெளிக்கின்ற வரை சற்று பொறுமையாக இருங்கள் அல்லது அந்த பைத்தியத்திலேயே அவர் மரித்துவிடுவார். அப்போதுதான் நாம் நிம்மதி பெறுவோம் என்றனர்.

.நூஹ் நபியின் (அலை) சமூகம் எடுத்துவைத்த 5 விதமான வாதங்கள்.

1 நூஹ் (அலை) என்பவர் தன்னை தூதுவர் என்று வாதிடுகிறார். அவர் உண்மையில் தூதுவராக இருந்தால் நம்மை விட மேன்மையானவராக அறிவும் ஆற்றலும் செல்வமும் பெற்று இருக்க வேண்டும் ஆனால் இவரும் நம்மை போன்ற சாதாரண மனிதராகவே இருக்கிறார் தூதுவர்கள் என்பவர்கள் அல்லாஹ்விடத்தில் கண்ணியமானவராகவும் நேசத்திற்குரியவராகவும் இருக்க வேண்டும் அவர்கள் மற்ற மனிதர்களை காட்டிலும் சிறப்பு பெற்றவராக இருக்க வேண்டும் ஆனால் இவரிடம் அவ்வாறு எவ்விதமான சிறப்பையும் நாம் காணவில்லை

2 இவர் சமுதாயத்தில் மதிப்பை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தூதுத்துவம் என்ற ஒரு சிந்தனையைக் கூறி மக்களை தன்னின்பால் ஈர்க்க நினைக்கிறார்.

3 உண்மையில் நம்மை நேர்வழியின் பால் அழைப்பதற்கு ஒரு தூதுவரை அல்லாஹ் அனுப்ப விரும்பினால் அவனிடம் நெருக்கத்தை அடைந்த நம்மை விட உயர்வான வலிமை பெற்ற வானவர்களை அல்லாஹ் அனுப்பி இருக்க வேண்டும். அவ்வாறு அனுப்பினால் இவர்கள் அல்லாஹ்விடம் நெருக்கத்தை அடைந்ததினால் மக்கள் அனைவரும் அவர்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள் எனவே இவர் தூதுவராக இருக்க முடியாது.

4 நூஹ் நபியின் சமுதாயம் தங்களின் எல்லா நடவடிக்கைகளிலும் தம் மூதாதையர்களின் சொல்லையே மதித்து வந்தனர். அவர்களிடம் நூஹ் நபி (அலை) தனது தூதுத்துவத்தை சொன்ன போது இவர் சொல்லும் கருத்துக்கள் புதியதாக இருக்கின்றன உண்மையில் இவரின் தூதுத்துவம் உண்மையாக இருப்பின் நமது மூதாதையர்கள் நம்மிடம் சொல்லி இருப்பார்கள். எனவே இவரின் தூதுத்துவம் பொய்யானதாகும்.

பொதுவாக ஒருவர் சமகாலத்து மக்களின் கருத்துக்கு மாற்றமாக, ஒரு கருத்தை தெரிவித்தால் அவரை சமூகம் மடையர் என்றோ பைத்தியம் என்றோ கூறுவது வழமை. நூஹ் நபி (அலை) அவர்கள் சொல்லும் கருத்து சமூக மக்களின் கருத்துக்கு மாற்றமாக இருந்ததினால் இவர்களை பைத்தியக்காரர் என்று கூறி பாமர மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தினர் மேல்மட்டத்து மக்கள்.

5  இறுதியாக இவருக்கு பைத்தியம் ஏற்பட்டுள்ளது மிக விரைவில் அவரை விட்டு பைத்தியம் தெளிவடைந்து விடும். எனவே அவரும் நம்மை போல் நம்மோடு சேர்ந்து கொள்வார். அப்படியும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அவரை கொலை செய்து விடலாம்.
மற்றொரு கருத்து அவர் சொல்லும் கருத்தில் உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டாம். உண்மையில் சற்று பொறுத்திருந்து பார்ப்போம் உண்மையில் அவர் தூதுவராக இருந்தால் அல்லாஹ் அவருக்கு உதவி செய்வான் அச்சமயம் நாம் அவரை பின்பற்றி கொள்ளலாம் அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம். என்ற கருத்தும் கூறுகின்றனர்.

تفسير الرازي

 

0
Would love your thoughts, please comment.x
()
x