وَ اِنَّ لَـكُمْ فِى الْاَنْعَامِ لَعِبْرَةً ؕ نُسْقِيْكُمْ مِّمَّا فِىْ بُطُوْنِهَا وَلَـكُمْ فِيْهَا مَنَافِعُ كَثِيْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ ۙ
திண்ணமாக, கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றுக்குள் இருப்பவற்றிலிருந்து ஒரு பொருளை (பாலை) உங்களுக்கு நாம் புகட்டுகின்றோம். மேலும், அவற்றில் ஏராளமான பயன்களும் உங்களுக்கு இருக்கின்றன. நீங்கள் அவற்றை உண்ணவும் செய்கின்றீர்கள்.
தண்ணீரின் மூலம் பயனடைந்த தாவரங்களின் பயன்களை பற்றி கூறிய பிறகு அதே தண்ணீரினால் பயனடையும் உயிரினங்களின் பயன்களையும் இங்கு விவரிக்கிறான்.
மனிதர்களே! உங்களிடம் உள்ள கால்நடைகளிலே அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் விளங்கி படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள். அவனே யாவற்றையும் படைத்து பரிபாலித்து வருகிறான். அவனுக்கு நன்றி செலுத்துங்கள் மாறு செய்து விடாதீர்கள். அந்த கால்நடைகளின் வயிற்றிலிருந்து பாலை வழங்குகிறான் அதை நீங்கள் குடித்து தாகம் தீர்கிறீர்கள்.
அந்த கால்நடைகளின் தோலின் மூலமாக கம்பளிகளும், இன்னும் பல பொருட்களை உருவாக்கி பயன்பெற்று கொள்கிறீர்கள். உயிரோடு இருக்கும் போது அதன் மீது பயனம் செய்து பயனடைந்த்தைப் போல் அவை அறுக்கப்பட்ட பின்னும் அதன் மாமிசத்தை புசித்து பயனடைகிறீர்கள். இவை அனைத்தும் அல்லாஹ் உங்கள் மீது செய்த உபகாரமேயாகும். எனவே அவனுக்கு மாறு செய்யாது அவனது கட்டளைகளுக்கு வழிபட்டு விடுங்கள். تفسير المحرر
அதில் ஒரு முக்கிய படிப்பினை, கால்நடைகள் வயிற்றில் சுமந்திருக்கும் அசுத்தமான துர்வாடை வீசும் இரத்தத்திற்கும், மலத்திற்கும் இடையில் அல்லாஹ்வின் ஆற்றலினால் தூய்மையான அழகிய நிறமுடைய சுவையான மனம் விரும்பும் பானமாகவும் உணவாகவும் பால் கிடைக்கின்றது இது அல்லாஹ்வின் மிகப்பெரும் அத்தாட்சிகளில் ஒன்றாகும். அந்தப் பால் கால்நடைகளின் மடுவில் இருந்து பெறப்படுகிறது அதே சமயம் அந்த கால்நடைகளை அறுத்துவிட்டால் அந்த பாலை மடுவிலே நாம் பெற முடிவதில்லை. இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றாகும்.
تفسير الرازي
وَعَلَيْهَا وَعَلَى الْـفُلْكِ تُحْمَلُوْنَ
அவற்றின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகின்றீர்கள்.
மனிதர்களே! பயணம் மேற்கொள்ளும் போது உங்களையும், உங்களது சுமைகளையும் சுமந்துதுச் செல்வதற்கு கால்நடைகளை பயன்படுத்துகின்றீர்கள். அவைகள் உடல் தோற்றத்திலும், வலிமையிலும், உங்களை விட மிகவும் பெரியதாக இருந்தும், அந்த கால்நடைகளை பலகீனமான சிறிய தோற்றமுடைய உங்களுக்கு அவை வழிபடுகின்றன. தரைப்பகுதியில் கால்நடைகளை வசப்படுத்தி இருப்பதைப் போல் தரைப்பகுதியை விட மூன்று மடங்கு பரப்பளவைக் கொண்ட கடலில் பயணம் செய்வதற்கும், உங்களது சுமைகளை சுமந்து செல்வதற்கும், கப்பலை வசப்படுத்தி கொடுத்திருக்கின்றான். இது அல்லாஹ் செய்த ஒரு முக்கிய அருளாகும். அவ்வாறு அந்த கால்நடைகளை உங்களுக்கு வழிபட வைக்கவில்லை எனில், உங்களின் அனேகமான காரியங்கள் தடைபட்டு போயிருக்கும். இதுவும் அவனின் அருட்கொடையாகும். எனவே அவனுக்கு நன்றி செலுத்தி அவனது கட்டளைகளை எடுத்து நடந்து கொள்ளுங்கள்.
نظم الدرر