காணாமல் போன தன் தம்பியை தேடி யமனிலிருந்து மக்காவிற்கு வந்த யாசிர் இப்னு ஆமிர் என்பவர், மக்காவின் புனிதத்துவத்தாலும் அதில் வசித்த குறைஷிக் குலத்தாரின் சிறப்பால் கவரப்பட்ட யாசிர், ‘பனூ மக்ஜூம்’ குலத்தாரின் ஆதரவில் வாழ்ந்து வந்தார்கள்.
அக்குடும்பத்தின் நம்பிக்கையை பெற்றதனால் அவர்களே, தம் வீட்டு அடிமைப் பெண்ணான சுமையா பின் கைய்யாஸ்(ரலி) என்பவரை யாசிருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இவ்விருவரின் இல்லற வாழ்க்கையின் பயனாய் அம்மார், அப்துல்லாஹ் என்ற இரு ஆண் மக்கள் பிறந்தனர்.
நபி (ஸல்) தூதராக அனுப்பப்பட்ட காலம் வாலிப வயதிலிருந்த அம்மார்(ரலி) அண்ணன் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை கேள்வியுற்று மக்கத்து இரவின் இருளில் மறைந்து சென்று அர்க்கமின் வீட்டை அடைந்து அண்ணலின் அறிவார்ந்த மார்க்கத்தை அக மகிழ்வோடு ஏற்று இஸ்லாத்தில் நுழைந்தார்கள். (ரலியல்லாஹு அன்ஹு)
வீட்டுக்கு வந்த மகனிடம் இருந்து அற்புத தகவலை பெற்ற அறிவார்ந்த பெற்றோர் அம் மார்க்கத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டனர். மறைத்து வந்த ஓரிறைக் நம்பிக்கையை செயலில் மறைக்க முடியவில்லை இதனை கண்டு கொண்ட மக்ஜூம் குலத்தவர் மதம் கொண்டனர்.
அக்குலத்தின் தலைவராக இருந்த அபூ ஹுதைஃபா இறந்திருந்தார்கள். தலைமையற்ற அக்குடும்பத்தில், முரடர்களும், முட்டாள்களும் தலை தூக்க தொடங்கினர். அதில் அபூ ஜஹலும் குறிப்பிடதக்கவன்.
ஒரு நாள் இவர்களை நோக்கி உன் முன்னோர்களின் மார்க்கத்தை துறந்து விட்டாயா உன்னை விட அவர்கள் உயர்ந்தவர்கள் இல்லையா ? உன்னை ஆதரித்த எங்களை கேவலப்படுத்தி விட்டாயே ! என்ற கடும் வார்த்தைகளால் காயப்படுத்தினர். அத்துடன் பெற்றோரையும்,
பிள்ளைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றியதோடு அவர்கள் தஞ்சம் போகும் இடங்களெல்லாம் சென்று வதை செய்ய முற்பட்டனர்.
மக்கத்து மக்களின் அக்காலத்து நடைமுறைகளில் ஓன்று தங்களின் அடிமைகளையும், ஆதரவில் இருப்பவர்களையும் அடித்து துன்புறுத்துவதற்கு குடும்பத்தாரிடம் அனுமதி கோற வேண்டும் என்ற குலப்பெருமை குடிகொண்டிருந்தது.
யாசிரை (ரலி) மக்கத்து வெயிலில் கிடத்தி கொடுமைப்படுத்தியதோடு அவர்களின் மனைவியை பெண் என்று பாராமல் கட்டி வைத்து வதை செய்தனர். இஸ்லாமிய வரலாற்றில் இந்த குடும்பம் நுகர்ந்த வேதனை போன்று வேறெந்த குடும்பமும் வேதனை அடையவில்லை என்று கூறும் அளவிற்கு அரக்கன் அபூ ஜஹலும் அவனின் பிற கூட்டாளிகளும் தொல்லை கொடுத்தனர்.
ஒரு நாள் இதயமற்ற நிலையில் ஈனத்தனமாக இக் குடும்பத்தின் மீது தனது கொடுமையான வன்முறையை கட்டவிழ்த்தி முதுமை அடைந்த நிலையிலிருந்த யாஸிர், சுமைய்யா, சிறிய மகன் அப்துல்லாஹ் ( ரலி) ஆகியோரை துன்புறுத்தி கொன்று விட்டான் மதம் பிடித்த முட்டாள் அபூ ஜஹல்.