கொலைகார பாதகர்களாகிய குரைஷியர் தமது சுய வாழ்க்கையில் செய்த குடி, விபச்சாரம் போன்றவற்றால் நுகர்ந்த இன்பத்தை விட பன்மடங்கு இன்பத்தை நுகர்ந்தது, முஸ்லிம் அடிமைகளை வதை செய்வதில்தான்.
மக்காவின் ‘ பனீ ஜம்ஹு’ குடும்பத்தின் அடிமையாக தம் வாழ்க்கையை தொடங்கிய அபிசீனிய நாட்டு பிலால் இப்னு ரபாஹ்(ரலி), உமைய்யா இப்னு களப் என்ற குரைஷித் தலைவனிடம் ஊழியம் செய்து வந்தார்கள்.
அடிமையானாலும் தமது அறிவால் சிந்தித்து முஹம்மதுல் அமீன் (ஸல்) அவர்களை நம்பிக்கையாளர் உண்மையாளர் என்று ஏற்றிருந்த இம்மக்கள் புதியதோர் கொள்கையை எடுத்துரைத்த போது அன்னாரை ஏன் மக்கத்து மக்கள் எதிர்க்க வேண்டும் என்று சிந்திக்கலானார்கள் பிலால்(ரலி).  அவரது சிந்தனையில் உண்மை புலப்பட்டதும் தான் அடிமை என்பதை மறந்து அறிவுக்கு முதலிடம் கொடுத்து அர்க்கமின் வீட்டில் நுழைந்து அடிமை விலங்கொடித்து புதிய மனிதராக வெளியில் வந்தார் பிலால் (ரலி) அவர்கள்.

 ஊழியம் புரிந்து வந்த வீட்டிற்கு திரும்பியவர் தன் உரிமையாளர் உமையாவின் சினத்திற்கு ஆளானார். மக்கத்து மலைகளில் பிரதிபலிக்கும் கோடை வெயில் வீட்டிற்குள்ளேயும் வந்ததை உணர்ந்தார் பிலால்(ரலி).
வீட்டை விட்டு துரத்தியதோடு நின்று விடாமல் பின் தொடர்ந்து ஊரின் நடுவில் மல்லார்ந்துக் கிடத்தினான் உமைய்யா. பிலாலின் நெஞ்சின் மீது கனமான பாறை ஒன்றை வைத்து அழுத்தி சிறுவர்களை தூண்டிவிட்டு பிலாலை கட்டி இழுத்துச் செல்ல வைத்தான். நீ சாகும் வரை இதே நிலையிலே கடப்பாயாக என்றான். இவ் வேதனையில் இருந்து விடுபட வேண்டுமாயின், ஓர் தேவனை வணங்கப்படும் மார்க்கத்தை விட்டுவிட்டு பல தெய்வங்களை வணங்கப்படும் வழிபாட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள் என்ற போது “அஹதுன், அஹதுன்” வணங்கப்படுபவன் ஒரே ஒருவனே! என்று துணிச்சலோடு மொழிந்துக் கொண்டே துன்பத்தைத் தாங்கிக் கொண்டார்.

 அக்காலத்து மக்கத்து நிலை அடிமைகளை உரிமையாளர் எதுவும் செய்யலாம் யாரும் கேட்கவோ தடுக்கவோ முடியாத அவல நிலை நிலவிய காலம் அது. வகை தெரியாத நிலையில் வாயடைத்து நின்றனர் பொதுமக்கள். சரியான தருணத்தில் துணிச்சலுடன் வந்த அபூபக்கர் (ரலி) முன்வந்து உமைய்யாவிடம் பிலாலை விலை பேசி வாங்கிக் கொண்டார்கள். பின்னர் வேதனையிலிருந்து விடுபட்ட பிலாலை உரிமையும் வழங்கினார் உரிமையாளர் அபூ பக்ர் (ரலி).

இஸ்லாத்திற்காக பிலால் (ரலி) யை வாங்கி உரிமை விட்டு ஆறுதல் அடைந்த மகிழ்ச்சியோடு அடிமைத்தனத்தின் பிடியால் அவதிப்படும் பலரை அபூபக்கர் (ரலி) விலை கொடுத்து வாங்கி உரிமை வழங்கி அக மகிழ்வடைந்தார்கள்.

அதில் குறிப்பிடத்தக்கோர் :
1 ஆமிர் இப்னு ஃபுஹைரா (ரலி)
2 நஹ்திய்யாவும் அவரது மகனும்(ரலி)
3 உம்மு உனைஸ் (ரலி)
4 பனீ அதிய் குடும்பத்து வேலைக்காரப் பெண் (ரலி)
5 ஜின்னீரா (ரலி)
6 அபூ ஃபுஹைரா (ரலி) ஆகியோர்.

0
Would love your thoughts, please comment.x
()
x