اَفَلَمْ يَدَّبَّرُوا الْقَوْلَ اَمْ جَآءَهُمْ مَّا لَمْ يَاْتِ اٰبَآءَهُمُ الْاَوَّلِيْنَ‏ اَمْ لَمْ يَعْرِفُوْا رَسُوْلَهُمْ فَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ

என்ன, இவர்கள் இந்த (இறை)வாக்கைச் சிந்திக்கவில்லையா? அல்லது இவர்களின் பண்டைக்கால மூதாதையர்களிடம் ஒருபோதும் வந்திராத ஏதேனும் கருத்தையா இவர்களிடம் இது சமர்ப்பிக்கின்றது? அல்லது தங்களின் இந்தத் தூதரை இவர்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லையா? (அப்படி அறியாது இருந்த காரணத்தாலா) அவரைப் புறக்கணிக்கின்றார்கள்?

வசனம் 62 – 72
அவர்களிடம் குர்ஆனின் வசனங்கள் கூறப்பட்ட போது மடமையினாலும், பொடுபோக்காகினாலும் அவர்களின் உள்ளங்கள் சத்தியத்தையும், உபதேசங்களையும் ஏற்க மறுத்து வந்தனர். அவர்களின் செயல்களோ இறை நம்பிக்கையாளர்களின் செயல்களுக்கு மாற்றமாக பாவமான காரியங்களிலேயே இறுதி வரையிலும் மூழ்கிருந்தனர்.
அவர்கள் மரணிக்கின்ற வரை இந்நிலையிலேயே அல்லாஹ் விட்டு வைத்திருக்கிறான். மரணம் நெருங்கும் சமயம் தங்களுக்கு ஏற்படவிருக்கும் வேதனையை பற்றி மரணிப்பதற்கு முன்பதாகவே நிச்சயம் அறிந்து கொள்வார்கள்.
அந்த நிராகரிப்பவர்கள் உலகத்தில் செல்வ செழிப்பிலும் ஆடம்பர இன்பங்களிலும் சொகுசாக வாழ்ந்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும் போது தங்களுக்கு ஏற்படும் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கத்தி கதறுவார்கள். எனினும் அந்த கத்துதலும் கதறுதலும் எவ்வித பயனையும் அவர்களுக்கு தராது. காரணம் உலகிலேயே சத்தியம் எது அசத்தியம் எது என்று தூதுவரின் மூலம் உபதேசிக்கப்பட்டன அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் புனித இறையில்லத்தை நிர்வாகம் செய்கிறோம் என்ற மமதையினால் சத்தியத்தை ஏற்க மறுத்து விட்டனர் மக்கத்து இணைவைப்பாளர்கள்.
அது மட்டுமின்றி சத்தியத்திற்கெதிராக இரவு நேரங்களில் ஒன்று கூடி சத்தியத்தை அழிப்பதற்கு திட்டமும் தீட்டி வந்தனர்.
இவ்வசனங்களில் இணைவைப்பாளர்களின் மூன்று தன்மைகள் கூறப்பட்டுள்ளன.
1 சத்தியத்தை ஏற்கும் சமயத்தில் அதை ஏற்காமல் புறக்கணிப்பது.
2 தாங்கள் மதிப்பு மிக்கவர்கள் என்ற மமதையில் பெருமையடித்தனர்.
3 அந்த மமதையினால் சத்தியத்தை எதிர்த்து பல திட்டங்களை தீட்டி வந்தனர்.

இந்த இணைவைப்பாளர்கள் அவர்களுக்கு அருளப்பட்ட இவ்வேதம் மிகவும் தெளிவான வசனங்களைக் கொண்டது. பல வருடங்களாக அருளப்பட்ட இவ்வேதத்தில் இவ் உலகை படைத்து பரிபாளிப்பவனே வணங்கப்பட தகுதியானவன் என்பதை மிக விரிவாகவும் தெளிவாகவும் ஆனித்தரமான ஆதாரங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளன. அப்பேர்ப்பட்ட இவ் வேதத்தை அவர்கள் சிந்தித்து தங்களது வாழ்வை சத்தியத்தில் இணைத்துக் கொள்ள வேண்டாமா? அவர்கள் ஏன் இதை சிந்திப்பதில்லை.

இவ்வுலகில் இவர்களுக்கு முன் எந்த ஒரு தூதரும் அனுப்பப்பட்டதில்லையா ? இந்த தூதர் புதிதான ஒர் கருத்தையா கூறுகிறார்கள். இதற்கு முன் சென்ற சமூகத்தவர்களுக்கு அதிகமான தூதுவர்கள் அனுப்பப்பட்டு அற்புதங்கள் வழங்கப்பட்டன அவைகளை ஏற்றவர்கள் வெற்றி அடைந்ததையும் அவர்களை பொய்ப்பித்தவர்கள் அடியோடு அழிக்கப்பட்டதையும் இவர்கள் கேள்விபட்டதில்லையா? எல்லாவற்றையும் அறிந்திருந்தும் பிறகு ஏன் இந்த தூதர் கூறுவதை ஏற்க மறுக்கின்றனர் ?

இவர்களிடம் அறிமுகமில்லாத ஓர் தூதுவரையா நாம் அனுப்பியுள்ளோம் ? இல்லை இல்லை! அனுப்பப்பட்ட இந்த தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை பற்றி இவர்களுக்கு தெரியாதா இவர்கள் தூதுத்துவத்திற்கு முன்பே இம்மக்களோடு வாழ்ந்தது மட்டுமல்லாம் மக்களால் மனதார உண்மையாளர் நம்பிக்கையாளர் என்று பெயர் பெற்றவர்கள். அவர்களின் வாழ்வில் எவ்விதமான குறைகளையோ ஒழுக்கமற்ற செயலையோ கண்டதில்லை அப்படி இருந்தும் இந்த தூதரை ஏற்க மறுப்பதற்கு என்ன காரணம்?

அந்த தூதுவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று கூறி அவர்களின் சொல்லை ஏற்க மறுக்கின்றார்களா ?
இம்மக்கள் இந்த தூதரை பற்றி இவர்கள் மிகவும் சாந்தமானவர்கள்
தீர்க்கமான அறிவு பெற்றவர்கள் என்று நன்கு விளங்கி இருக்கின்றனர்.
அப்படி இருந்தும் இத்தூதரின் கருத்தை மறுக்கக் காரணம் என்னவெனில் அவர்கள் சொல்லும் சத்தியம் இவர்களில் மனோ இச்சைகளுக்கு மாற்றமாக இருப்பதினால் மட்டுமே அவர்களில் அநேகர் வெறுக்கின்றனர்.

இந்த மக்கத்து இணை வைப்பாளர்கள் தங்களின் மனோஇச்சைகளுக்கு தோதுவாக இவ் வேதம் வழங்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். அவ்வாறு அவர்கள் விரும்புவதைப் போல் வழங்கப்பட்டு விட்டாள் வானம் இன்னும் பூமி அவைகளுக்கிடையில் இருக்கும் படைப்பினங்கள் யாவும் சீர்கேட்டு அழிந்து போய்விடும். எனினும் அவர்களுக்கு வழங்கப்படும் இவ்வேதத்தை பற்றி அவர்கள் விளங்குவதில்லை இதன் மூலமே அவர்களுக்கு கண்ணியத்தையும், உயர்வையும் நாம் வழங்கி இருக்கின்றோம் எனினும் அதை விளங்காமல் புறக்கணித்து செல்கின்றனர்.

யா முஹம்மத் (ஸல்) நீங்கள் அவர்களிடம் சத்தியத்தை பின்பற்றுபவரிடம் ஏதேனும் கூலி கேட்டீர்களா? சத்தியத்தை ஏற்றவர் பின்பற்றுவதற்கு கூலியொன்றும் கேட்கவில்லையே ? அப்படி கேட்டால்லல்லவா சத்தியத்தை ஏற்று நடப்பதற்கு அவர்கள் யோசிக்க வேண்டும். தூதுவர்கள் தங்களது தூதுத்துவத்தை எத்தி வைப்பதற்கு அல்லாஹ் வழங்கும் கூலியோ இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இச்சொத்து செல்வத்தை காட்டிலும் அது மகா உயர்ந்ததாகும்.

இந்த வசனத்தில் அல்லாஹ் அந்த இணைவைப்பாளர்களைப் பார்த்து குர்ஆனில் உள்ள கருத்துக்களை சிந்திக்கவில்லையா என்று கேட்கிறான். இதன் மூலம் குர்ஆனின் வசனங்களை சிந்தித்து படிக்கும்போது அதில் உள்ள கருத்துக்களை அவர் நம்பிக்கை கொள்வதற்கும் நிராகரிப்பிலிருந்து விலகியிருப்பதற்கும் காரணமாக அமையும்.
அவர்கள் நிராகரிப்பிலேயே மூழ்குவதற்கு காரணம் நலவுகளுக்கு வழிகாட்டும் பாவங்களை விட்டும் தடுக்கும் இவ்வேதத்தை சிந்திக்க முற்படாமல் இருந்ததே காரணமாகும் என்று கூறுகிறான்.

(تدبر )   இந்த வார்த்தைக்கு படிப்படியாக  அறிதல் என்று பொருள். அதாவது குர்ஆனை படிப்பவர் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை சிந்தித்து படித்து. பிறகு மீண்டும் அதை ஆரம்பித்து முடித்து, பின்னர் மீண்டும் இவ்வாறு தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக படித்து படித்து விளங்க வேண்டும் என்பதை இந்த வார்த்தை உணர்த்துகின்றது.
இப்னு தைமியா (ரஹ்)கூறுகிறார்கள்: குர்ஆனில் பல இடங்களில் சிந்திக்கும் படி அல்லாஹ் ஏவுகின்றான் ஆர்வமூட்டுகின்றான். இதன் மூலம் குர்ஆனை படிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தப்படுகிறது. மேலும் குர்ஆனை சிந்தித்தலென்பது அதில் கூறப்படும் கருத்துக்களை விளங்கி படித்தால் மட்டுமே சிந்திக்க முடியும். மனிதன் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையின் நோக்கமும் அதை மற்றவர் விளங்க வேண்டும் என்ற அமைப்பிலே தான் கூறப்படுகின்றது அப்படி இருக்க மனிதர்களின் இம்மை மறுமையின் வெற்றிக்கு வழிகாட்டியாக அமையக்கூடிய இந்த வேதத்தை விளங்கி படிப்பது மிகவும் முக்கியமானதாகும். உலகிலுள்ள முக்கியமான மருத்துவம் கணிதம் போன்ற துறைசார்ந்த நூல்களை படிப்பதற்காக மட்டுமே எழுதாமல் அதை விளங்க வேண்டும் என்பதற்காக எழுதப்படுகின்றன. அப்படி இருக்கையில் உலக மக்கள் யாவரின் வெற்றிக்காக அனுப்பப்பட்ட இந்த வேதத்தை விளங்கி படிப்பதென்பது எவ்வளவு முக்கியமானது என்பதை விளங்க வேண்டும்.

ஹசனுல் பஸரீ (ரஹ்) கூறுகிறார்கள் : மக்கள் குர்ஆனை சிந்தித்து அதில் கூறப்பட்டவற்றின் படி தனது வாழ்வில் நடப்பதற்கு குர்ஆன் அருளப்பட்டது. எனினும் மக்களோ அதை ஓதுவதை மட்டுமே வணக்கமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகிறார்கள்: குர்ஆனில் ஆறு விதமான செய்திகள் கூறப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொரு மனிதனும் திரும்பத் திரும்ப படித்து படித்து விளங்குவதும் அதன்படி தனது வாழ்வை மாற்றிக் கொள்வது அவசியமானதாகும்.

1 அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் உயர்வான பண்புகளும் அவனது ஞானம் மிகுந்த செயல்களைப் பற்றி கூறப்பட்டிருக்கும்.
2 அவ்வாறே அவனை அடையக்கூடிய வழிமுறைகளும் அவனுக்கு விரும்பும் காரியங்களையும் கூறப்பட்டிருக்கும்.
3 அவன் விரும்பியதைப் போன்று தமது வாழ்வை அமைத்துக் கொண்டால் இம்மையில் கிடைக்கும் வெற்றியையும் மறுமையில் தயார் செய்யப்பட்டிருக்கும் நிரந்தரமான இன்பங்களை பற்றி கூறப்பட்டிருக்கும்.

4 அவ்வாறே இதற்கு மாற்றமாக மனிதர்கள் விரோதியான சைத்தானையும் அவனது பண்புகளையும் கூறப்பட்டிருக்கும்.
5 சைத்தானுடைய குணாதிசயங்களும் அவன் விரும்பக்கூடிய வழிகேடுகளையும் விரிவாக கூறப்பட்டிருக்கும்.
6 அதற்குப்பின் சைத்தானின் வழிமுறைகளை எடுத்து நடப்பவர்களுக்கு இவ்வுலகில் கிடைக்கும் கேவலமும் மறு உலகில் கிடைத்திருக்கும் நிரந்தரமான வேதனைகளைப் பற்றி விரிவாக கூறப்பட்டிருக்கும். இவைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மனிதனும் விளங்குவது அவசியமாகும். எனவே குர்ஆனை விளங்கி ஓதுவதில் முயற்சிக்க வேண்டும்.

முன்னோர்களின் சம்பவங்களில் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஏற்று நடந்தவர்களுக்கும் இறை மறுப்பாளர்களுக்கும் ஏற்பட்ட நிகழ்வுகளும் இறுதியில் உலகில் அவர்களுக்கு கிடைத்த வெற்றியும் வெற்றி பெற்ற நல்லோர்களின் தன்மையும் மறுமையில் அவர்களுக்கு கிடைக்கவிருக்கும் இன்பங்களும் அவர்கள் இவ்வுலகில் வாழும் போது பேணி நடந்த பண்புகளையும் குர்ஆனில் காண முடியும்.
அவர்கள் அழிக்கப்பட்டதில் நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் விவரித்துள்ளான்

மனிதர்கள் அவர்களின் மனோ இச்சைக்கு தோதுவாக இறைவசனங்கள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் அவ்வாறு அருளப்பட்டு விட்டாள் உலகம் பேரழிவை சந்தித்திருக்கும் எனவே மனிதன் தனது மனோ இச்சையை அல்லாஹ் அருளியிருக்கும் இவ்வேதத்திற்கு தோதுவாக தன்னை மாற்றி அமைக்க முயற்சிக்க வேண்டும்.

تفسير المحرر 

0
Would love your thoughts, please comment.x
()
x