اِنَّ الَّذِيْنَ يَاْكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ نَارًا ؕ وَسَيَـصْلَوْنَ سَعِيْرًا
அல்லாஹ் கூறுகிறான் அனாதைகளின் பொருட்களை அநியாயமாக உண்பவர்கள் தனது வயிற்றிலே நரக நெருப்பை உண்ணுகிறார்கள். இன்னும் மிக விரைவில் நரக நெருப்பில் அவர்கள் நுழைவார்கள்.
நமது இணையத்தின் “பாவங்கள்” என்ற பக்கத்தில் வரும் அனைத்து தலைப்புகளும் (முதலாவது மற்றும் மூன்றாவது தலைப்புகளைத் தவிர) முற்காலப் பேரறிஞர் இமாம் ஃதஹபீ அவர்களின் பிரசித்தி பெற்ற நூலான ‘பெரும் பாவங்கள்’ என்ற நூலின் வரிசையில் அமைந்துள்ளன. இந்த தலைப்புகள், தற்கால ஆய்வாளர் மஷ்ஹூருல் ஹசன் ஆலு சல்மான் அவர்கள் ஆய்வு செய்த பதிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டவை.
அனாதைகளின் பொருளை அநியாயமாக உண்பது.
அல்லாஹ் கூறுகிறான் அனாதைகளின் பொருட்களை மிக அழகிய முறையில் தவிர நீங்கள் நெருங்கி விட வேண்டாம்.
அதாவது அவர்களின் பொருட்களை பாதுகாக்கும் வழிகளிலேயே மிகச் சிறந்த வழியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அனாதை என்பது “தனித்து” இருப்பது என்பது பொருள்
இஸ்லாமிய பார்வையில் இதன் பொருள் : தனது சிறு பிராயத்தில் தந்தையை இழந்த ஆண் அல்லது பெண்ணை குறிப்பதாகும். அதே சமயம் ஒருவர் (ஆண் அல்லது ஆண்) சிறுபிராயத்தில் தந்தையை இழந்து பின்னர் வாலிபத்தை அடைந்து விட்டால் இவர் அனாதை என்பதில் கட்டுப்பட மாட்டார் என்பது குறிப்பிடதக்கது!
நபியவர்கள் ஒரு அறிவிப்பில் கூறுகையில் “பருவ வயதை அடைந்தவர் அனாதை இல்லை”.
أبو داود
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “அழிவில் தள்ளக்கூடிய ஏழு பெரும் பாவங்களை விட்டும் விலகி இருங்கள்” என்று கூறி, அதில் “அனாதைகளின் பொருட்களை உண்பதையும்” குறிப்பிட்டார்கள்.
அனாதைகளின் பொருட்களை கண்கானிப்பாளர்கள், ஏழையாக இருந்தால் அப்பொருளைக் கண்காணிப்பதற்கு கூலியாக அப்பொருளிலிருந்து தனது செலவிற்கு தேவையானதை பெற்றுக் கொள்வதில் எவ்வித தவறும் இல்லை. அதே சமயம் தேவையை விட அதிகமாக பயன்படுத்துவது (ஹராமாகும்) பெரும் பாவமாகும்.
“தேவையான செலவு ” என்பது தீய சிந்தனை அல்லாமல் நறுகுணத்தோடு வாழும் நல்ல மனிதர்களின் செலவினங்களைக் கவனித்து சொல்லப்படும்.
ஒரு பகுதியில் இவரைப் போன்ற நபர்களின் மாத செலவு ஆயிரம் ஆக இருந்து, இவருக்கு 2000 ரூபாய் செலவாகும் எனில், இவர் ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க வேண்டும்.
அனாதையின் பொருளை பராமரித்து வந்தவர், ஏழ்மையின் நிலையில் அப்பொருளிலிருந்து பணம் பெற்று, பின் நாட்களில் வசதி வாய்ப்பினை அடைந்து விட்டால் அனாதையை பராமரித்த காலத்தில் தனது தேவைக்காக பயன்படுத்திய செல்வத்தை அனாதையிடம் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
الكبائر تحقيق مشهور بن حسن آل سلمان. ١٢٥