ஏறத்தாழ 3 ஆண்டுகள் நபித்துவ வாழ்வு உருண்டோடிய தருவாயில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்திருந்தனர். அது மட்டும் இன்றி மக்கத்து பெரும்பாலான மேல்குடியினர் தங்களாலான எதிர்ப்புகளை சலைக்காமல் கொடுத்து வந்தனர்.
அதன் சில காரணிகளை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- மக்கத்து மாநகரம் அதை சூழவுள்ள மக்களிடத்தில் பெரும் மதிப்பை பெற்றிருந்தது. அங்கு வருவதையும் தங்களின் குல தெய்வங்களை அங்கு வைத்து வணங்கி ஆராதனை செய்வதையும் பெருமைக்குரிய செயலாக அரபு தீபகற்பத்தின் பல கோத்திரத்தினர் கருதி வந்தனர்.
- இதனால் மக்கமா நகரத்தின் மக்களை பல கோத்திரத்தினர் கண்ணியமும் மரியாதையும் வைத்திருந்தனர். மேலும் அவர்களை தங்களது தெய்வங்களை பூஜை செய்யும் பூசாரிகளாகவும் கருதி வந்தனர்.
- பல தெய்வ வழிபாட்டிற்காக பிற கோத்திரத்தார் அங்கு வருவதனால் மக்கத்து வாணிபத்தில் வளம் பெற்ற மேல்குடி வர்க்கத்தினர் அவ்வாறு வருவதை தங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதி வந்தனர்.
- மக்காவிற்கு அருகில் துறைமுகம் அமைந்திருந்ததால் பன்னாட்டு சரக்கு கப்பல்கள் அங்கு வந்து தங்கள் பகுதியில் கிடைக்கும் பொருட்களை மக்கத்து சந்தைகளான “காஸ்” “மஜன்னா” போன்றதில் விற்பனைக்கு கொண்டு வரும் கிழக்கு ஆப்பிரிக்க, இந்திய, சீன, மற்றும் தொலைதூர வணிகர்களை வரவழைத்து அவர்களின் பொருட்களை வாங்கி மற்ற அரபு கோத்திரங்களுக்கு கை மாறி விற்பனை செய்யும் தரகர்லாகவும் திகழ்ந்தனர்.
- இவ்வாறு வரும் அனைத்து அரபு கோத்திரங்களும் பல தெய்வ வழிபாடுகளை கொண்டிருந்ததால் மக்கத்து மக்கள் ஓரிறைக் கொள்கையை ஏற்றால் தங்களின் மீதுள்ள கண்ணியமும் எடுபட்டு தாங்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கும் வளம் வலு விழந்து விடும் என்றெண்ணி நபிகளாரையும் அவர்களின் கொள்கையை ஏற்றவர்களையும் வதை செய்து வந்தனர்.
நபி வரலாறு 177 – 182