நபி (ஸல்) அவர்களின் சொல்,செயலில் இட்டுகட்டுதல்
இமாம் அஃதஹபி கூறுகிறார்கள் : நபிகளாரின் மீது இட்டுக்கட்டுதல் (பொய்யுறைத்தல்) என்பது சில சமயம் மனிதனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடும் இறை நிராகரிப்பு என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றார்கள். காரணம் ஒருவர் அல்லாஹ் இன்னும் அவனது தூதர் விஷயத்தில் ஆகுமானதை தடை செய்வதற்கும் தடை செய்ததை ஆகுமாக்குவதற்காக, அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்னதாக கூறினால் அது பகிரங்கமான இறை நிராகரிப்பு என்பதாகும். அதே சமயம் ஹலால் ஹராம் இல்லாத மற்ற விஷயத்தில் ஒருவர் பொய்யுரைப்பது என்பது பெரும் பாவங்களைச் சார்ந்ததாகும்.
.
நபிகளார் (ஸல்) கூறினார்கள் என்னின் மீது பொய்யுரைப்பது மற்றவர்கள் மீது பொய் சொல்வதைப் போன்று லேசானதல்ல. யார் என் மீது பொய்யுரைக்கிறாரோ அவர் தனது தங்கும் இடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும்.
மேலும் என் மீது யார் இட்டுக் கட்டுகிறாரோ அவருக்கு நரகத்தில் ஒரு வீடு கட்டப்படும் என்றும் கூறியுள்ளார்கள்.
மேலும் நான் கூறாத விஷயத்தை நான் கூறியதாக சொல்கிறவர் தனது தங்குமிடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும் என்று கூறியுள்ளார்கள்.
இறை நம்பிக்கையாளரிடம் எத்தனை பண்புகள் வேண்டுமானாலும் இருக்கலாம் அதே சமயம் அவரிடம் ஏமாற்றுதல், பொய்யுரைத்தல் ஆகிய இரு பண்புகள் அவரிடம் இருக்கவே முடியாது.
ஒருவர் நான் கூறியதாக எண்ணி நான் சொல்லாத ஒரு செய்தியை நான் சொன்னதாக சொன்னால் அவன் பொய்யர்களில் ஒருவனாவான்.
இதனை வைத்து பார்க்கும் பொழுது இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புகளை கூறுவது எவ்விதத்திலும் அனுமதிக்கவே முடியாது என்பது விளங்குகிறது. (அல் கபாயிர் – இமாம் அஃதஹபி )
———————————————————
நபிகளாரின் மீது பொய்யுரைத்தல் என்பது நபிகளார் (ஸல்) கூறாத ஒரு செய்தியை நபி சொன்னதாக சொல்வது அல்லது நபியவர்கள் சொல்லிய வார்த்தைக்கு வேண்டுமென்றே சுயமாக ஒரு விளக்கம் அளிப்பது இவைகளும் நபியின் மீது பொய்யுரைப்பதில் கட்டுப்பட்டதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறாததை சிலர் மக்களுக்கு நபிமொழி என்ற பெயரில் விழிப்புணர்விற்காக, எச்சரிப்பதற்காக உபதேசங்களின் மூலமும் சிறு சிறு பிரசுரங்களை மக்களுக்கு மத்தியில் விநியோகிக்கின்றனர். இது மாபெரும் தவறாகும் மக்களுக்கு போதனையின் மூலம் பயன்பட வேண்டும் எனில் உண்மையான செய்திகளை கூறுவதன் மூலம் மட்டுமே பயன்களை எதிர்பார்க்க முடியும். பெரும் பாவமான பொய்யான அறிவிப்புகளைக் கூறி மாற்றங்களை ஏற்படுத்த நினைப்பது அறிவீனமாகும்.
எனவே விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்கள் நபிகளாரின் தெளிவான உண்மையான செய்திகளை சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
رياض الصالحين ابن عثيمين
ஒரு அறிவிப்பில் நான் கூறிய செய்தி ஒரு வசனத்தின் அளவானாலும் பிறருக்கு எத்திவையுங்கள். என்று கூறினார்கள் அதாவது எனது செய்திகள் ஒரு வசனத்தின் அளவு சிறியதாக இருந்தாலும் அதையும் பிறருக்கு எத்தி வைப்பதில் கவனம் செலுத்துங்கள் அதே சமயம் எந்த செய்தியானாலும் நான் கூறாத செய்தியை கூறிவிட வேண்டாம். அவ்வாறு கூறுபவர் நரகத்தில் தனது தங்குமிடத்தை அமைத்துக் கொள்ளட்டும் அல்லது அமைத்துக் கொள்வார் என்று கூறியுள்ளார்கள்.
ஒருவர் நபிகளார் (ஸல்) கூறியதாக ஒரு செய்தியை கூறினால் அது அல்லாஹ்வின் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை ஏற்படுத்துவதாக ஆகிவிடும் காரணம் நபிகளார் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரும் செய்திகளையே அவர்கள் கூறுவார்கள் என்பதாக குர்ஆனில் வந்துள்ளது. எனவே ஒருவர் சாதாரணமாக பொய் உரைப்பதற்கும் நபிகளாரின் விஷயத்தில் பொய் உரைப்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமுள்ளது.
அவ்வாறே ஓர் அறிஞர் கூறாத கருத்தை அவர் கூறியதாக சொல்வதும் சாதாரண பொய்யைக் காட்டிலும் கடினமானதாகும் ஏனெனில் அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாக இருக்கின்றனர். அவர்கள் கூறுவது மார்க்கத்தில் இருப்பதையே கூறி இருப்பார்கள் என்று பிறர் கருத வாய்ப்புள்ளது. ஒருவர் ஒர் அறிஞர் கூறாத கருத்தை கூறும் பொழுது பிறர் அதை செய்தால் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை செய்ததாக ஆகிவிடும். எனவே அறிஞர்களின் கருத்துக்களை கூறும் சமயமும் கவனத்தை கையாள வேண்டும்.
நபிகளார் அறிவிக்காததை அறிவித்ததாக கூறுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் ஆகும் அவர்கள் மிக அதிகமாக அல்லாஹ்வின் விஷயத்திலும் நபிகளாரின் விஷயத்திலும் தைரியமாக பொய்யுரைத்துள்ளார்கள். என்பதாக நபிமொழி ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
رياض الصالحين ابن عثيمين