وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ
(நபியே!) நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்.
நபி அவர்கள் 35 வது வருடத்தை அடைந்த பொழுது குரைஷிகள் கஃபாவை புதுப்பிக்க ஆரம்பித்தார்கள். மக்காவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு அதன் அடித்தளம் உறுதியற்று சுவர்கள் எல்லாம் இடிந்து விட்டதனால் அதை புதுப்பிக்க வேண்டும் என்று குறைஷிகள் எண்ணினார்கள். அந்த நிகழ்வில் நபி அவர்களும் கலந்து கொண்டார்கள்.
நபி இப்ராஹிம் (அலை) மின் காலம் முதல் கஃபா ஆலயம், ஒரு ஆலுயரத்திலேயே அதன் நான்கு சுற்றுச் சுவர்கள் அமைந்திருந்தன. இதனால் அங்கு வரும் திருடர்கள், ஏறிக் குதித்து சிலைக்கு அணிவித்திருந்த நகைகளை அவ்வப்போது திருடிச் சென்றுவிடுவர். மேலும் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த கஃபா பருவ மழையால் பாதிப்படைந்து பழுதடைந்திருந்தது. அதனால் மக்கத்து தலைவர்ளில் சிலர் கஃபாவை புதுப்பித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டனர்.
ஆனால் பொதுமக்களோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் அவர்களின் எண்ணம் யானை ஆண்டில் கஃபாவை இடித்து தகர்க்க வந்த ஆப்ரஹாவிற்கு ஏற்பட்ட அவல நிலை அவர்கள் மனதுக்குள் மறவாத வடுவை ஏற்படுத்தியிருந்தது. இதனையே எதிர்ப்புக்கு காரணமாக கூறி வந்தனர். ஆனால் புனித வீட்டை இடித்து புதிய வீட்டை கட்ட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக நின்ற வலீத் பின் முஙீரா என்ற தலைவர், ஆப்ரஹா இதனை இடிக்க வந்ததோ தீய நோக்குடன் நாமோ இதனை உறுதிப்படுத்துவதற்காகவே இடிக்கப் போகிறோம் என்ற வாதத்தை எடுத்து வைத்து தாமே முதன் முதலாக இடிக்கத் தொடங்கினார்.
கஃபாவின் ஒரு பகுதியை இடித்துப் போட்டுவிட்டு அடுத்த நாள் திரும்பி வர எண்ணிச் சென்று விட்டனர் குரைஷிகள் அவர்களின் இதயங்களில் ஒரு அச்சம் குடி கொண்டிருந்தது. முதல் முதலில் இடிக்கத் தொடங்கிய முஙீராவின் மகன் வலீதுக்கு, அந்த இரவு ஏதேனும் பாதகம் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருந்தது. அடுத்த நாள் காலை எக்குறையும் இன்றி எழுந்து வந்ததை கண்ட மக்கள் அச்சம் தீர்ந்தனர்.
கஃபாவின் நான்கு சுவற்றில் ஒரு மூலையில் ஹஜ்ருல் அஸ்வத் என்ற சுவனத்துக் கல் ஒன்று பதிக்கப்பட்டு இருந்தது. அதை எடுத்துவிட்டு முழுமையாக கட்டும் சமயம் பொருத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் எடுத்து வைத்து விட்டனர்.
கஃபாவின் பராமரிப்பு வேலை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் ஜித்தா துறைமுகத்திற்கு கிரேக்க கப்பல் ஒன்று அடுத்த பயணத்தை தொடர முடியாமல் கிடந்தது. அக்கப்பலில் கட்டிடப் பணிகளுக்கு தேவையான மரத்தடிகளும் பலகைகளும் இருந்ததை, அறிந்த மக்கத்துக் குறைஷிகள் அப்பொருட்களை விலை கொடுத்து வாங்கி வைத்திருந்தனர் மேலும் எகிப்து நாட்டின் தச்சன் ஒருவன் வந்திருப்பதை அறிந்து, அவனிடம் அவனை வைத்து காபாவின் பணியை பூர்த்தி செய்யலாம் என்ற யோசனையும் வைத்தனர்.
மக்ஜூமி கிளையைச் சார்ந்த அபூவஹப் இப்னு அம்ரி என்ற குரைஷித் தலைவரின் பரிந்துரைப்படி இக்கட்டடப்பணியை நான்குக்குழுவாக அமைப்பதற்கு முடிவு செய்தனர்.
பனூ அப்துமனாஃப், பனூ உஜ்ரா
இருவரும் கஃபாவின் கிழக்குப் பகுதியில் சுவர் மற்றும் கதவை அமைப்பது என்று முடிவு செய்தனர். பனூ மக்ஜூம் மற்றும் சிலர்,
கருப்புக் கல்லுக்கும், எமனி முனைக்கும் இடைப்பட்ட பகுதியை சீரமைப்பது என்றும். பனூ ஜும்ஆ, பனூ சஹமும்
இருவரும் கஃபாவின் மேற்குச் சுவரை அமைப்பது என்றும். பனூ அப்துத் தார், பனூ அசது, பனூ கஅபு
இவர்கள் கஃபாவின் வடக்கு பகுதியையும் அதனை சார்ந்த ஹதீம் பகுதியையும் அமைப்பது என்றும்.
கஃபாவின் இந்த சீரமைப்பு பணியில் நபிகளார் தனது குடும்பமான பனூ ஹாஷிம் அப்துமனாஃப் இவர்களோடு சேர்ந்து கலந்து கொண்டார்கள்.
இந்தப் பணியை பாகும் என்ற ரோமானிய கொத்தன், கல் எடுத்து தொடங்கி வைத்தான். புனித கல்லை அவ்விடத்தில் வைக்கும் சமயம் அந்த சிறப்பை யார் அடைவது என்ற போட்டி நான்கு கோத்திரங்களுக்கு மத்தியில் நடைபெற்றது. அச்சமயம் அபூ உமைய்யா இப்னு முஙீரா என்ற முதியவரின் யோசனைக் கேற்ப மறுநாள் காலையில் கஃபாவிற்கு முதலில் வருபவர் இந்த முடிவை செய்யட்டும் என்று ஒருமித்த கருத்துக் கொள்ளப்பட்டது. இதன்படி முதலாவதாக வந்தவர்கள் உண்மையாளர் நம்பிக்கையாளர் என்ற பெயர் பெற்ற நபியவர்கள் ஆகும்.
நபியவர்கள் மக்கள் அனைவரும் தமது கருத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருந்தாலும் அச்சமயத்தில் நபிகளார் நிதானத்தை கடைபிடித்து இப்பணியில் ஈடுபட்ட நான்கு கோத்திர தலைவர்களையும் அழைத்து ஒரு துணியின் நான்கு மூலைகளை ஒவ்வொருவரையும் பிடிக்கச் செய்து அந்த கல் பதிக்க வேண்டிய இடத்தை அடைந்த பொழுது நபிகளார் தமது கரத்தால் அதை பதித்தார்கள்.
இதன் மூலம் புனித இல்லத்தை சீரமைத்த சமயம் புனித நகரமான மக்காவில் இரத்தக்களரி ஏற்படுவது தடைபெற்று போனது.
நபி வரலாறு (அதிரை அஹ்மத்)