اُولٰٓٮِٕكَ هُمُ الْوَارِثُوْنَ ۙ الَّذِيْنَ يَرِثُوْنَ الْفِرْدَوْسَؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
இவர்கள்தாம் ‘ஃபிர்தவ்ஸ்' என்னும் சொர்க்கத்திற்கு வாரிசுகளாகி அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
மேற்கூறபட்ட பண்புகளை பெற்றவர்களே, உயர்வான சுவனத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறந்த வசிப்பிடமான பிர்தௌஸ் என்னும் சுவனத்தை அனந்தரமாக பெற்றுக்கொள்வார்கள். அங்கே அவர்கள் நிரந்தரமாக தங்குவதோடு அங்கு இருக்கும் இன்பங்கள் முடிவடைவதற்கோ, கிடைக்காமல் போவதற்கோ வாய்ப்பே இருக்காது. تفسير الميسر
உயர்வான தன்மைகளைப் பெற்றதினால் உயர்வான சுவனமான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவனத்தில் நுழைவதற்கு தகுதி பெற்று விட்டார்கள்.
أيسر التفاسير
ஒவ்வொரு மனிதனுக்கும் சுவனத்தில் ஒரு இடமும் நரகில் ஒரு இடமும் ஒதுக்கப்பட்டிருக்கும். நம்பிக்கையாளர் சுவனத்தில் தனது வீட்டை அமைத்து நரகிலிருந்த தனது வீட்டை இடித்துக் கொள்வார். நிராகரித்தவர் சுவனத்தில் இருந்து தனது வீட்டை இடித்து நரகில் தனது வீட்டை அமைத்துக் கொள்வார்.சுவனத்தில் உள்ள இருப்பிடங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கு வழிபட்டு நடந்தவர்களுக்கே படைக்கப்பட்டதாகும். எனவே நம்பிக்கையாளர்கள் சுவனத்தில் இருக்கும் நிராகரித்தவர்களின் இடங்களையும் தனதாக்கிக் கொள்வார்கள். ابن كثير
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் உங்களில் ஒவ்வொருவருக்கும் சுவனத்தில் ஒரு இடமும் நரகத்தில் ஒரு இடமும் தயார் செய்யப்பட்டுள்ளது. அவர் (இறை மறுப்பாளர்) மரணித்து விட்டால் நரகில் நுழைவார். சுவனவாசி சுவனத்தில் தனது இடத்தையும் நிராகரித்தவரின் இடத்தையும் தனதாக்கிக் கொள்வார்.
அவர்கள் தான் அனந்தரக்காரர்கள் என்ற வசனத்தின் விளக்கமாகும்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல் இப்னு மாஜா.
நல்லவர்களுக்கு கிடைக்கும் சுவனத்தைப் பற்றி கூறும் பொழுது அவர்களுக்கு அனந்தரமாக கிடைக்கும் என்ற வார்த்தையை சொல்வதற்கு பல கருத்துக்களை அறிஞர்கள் கூறினாலும், அதில் ஒரு கருத்து மனிதன் செல்வத்தை சொந்தமாக்கிக் கொள்வதில் ஒரு முறை, தனது மூதாதையரின் செல்வத்திலிருந்து கிடைத்த வாரிசு சொத்தாகும். அனந்தரமாக கிடைத்த சொத்தை வாங்கியவர் கொடுத்தவருக்கே திருப்பி கொடுக்கவும் முடியாது. கொடுத்தவரும் அதை திரும்ப கேட்க முடியாது.(காரணம் சொத்திற்கு உரிமை பெற்றிருந்தவர் மரணித்துவிட்டார்) மேலும் அவருக்கு மார்க்கம் வழங்கியுள்ள சொத்துரிமையை எவராலும் தடை செய்யவும் முடியாது. எனவே தான் அனந்தர சொத்தாக பெறுவார் என்று சொல்லப்பட்டது.
சுவனத்தில் உயர்ந்தது ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்பதாகும். நபி (ஸல்) கூறினார்கள் நீங்கள் அல்லாஹ்விடம் ஃபிர்தவ்ஸ் என்ற சுவனத்தைக் கேட்கவும். அதற்குமேல் தான், அல்லாஹ்வின் அர்ஷு இருக்கிறது. அங்கிருந்துதான் சுவன ஆறுகள் பொங்கி ஓடுகின்றன. بخاري
மூன்று காரியங்களை தனது கரத்தால் படைத்துள்ளான் 1 ஆதம் நபியை (அலை) 2 மூஸா (அலை)க்கு அருளப்பட்ட தவ்ராத்தை தனது கரத்தால் எழுதினான் 3 ஃபிர்தவ்ஸ் என்ற சுவனத்தில் மரத்தை தனது கரத்தால் நட்டினான். صفة الجنة الإصفهاني
கற்பனைக் கூட செய்ய முடியாத அளவிற்கு அழகும் இன்பங்களும் மட்டுமே நிரம்பிய சுவனத்தை, அல்லாஹ்விற்கு வழிபட்டவர்களுக்காக சொந்தமாக்கிக் கொடுக்கும் அந்த உயர்வான ஃபிர்தவ்ஸில் நம் அனைவரையும் புகச் செய்வானாக!