குர்ஆன் பாடம் 10

படிப்படியாகத் தடை செய்யப்பட்ட மது
يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ‌ؕ قُلْ فِيْهِمَآ اِثْمٌ کَبِيْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ

‘(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘அவ்விரண்டிலும் பெரும்கேடும், மனிதர்களுக்கு (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப்பெரியதாகும்’ எனக் கூறுவீராக! மேலும், தாம் எதை செலவு செய்வது? என்றும் உம்மிடம் கேட்கின்றனர். ‘(தேவைக்குப் போக) மீதமுள்ளதை’ எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ்  வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.’ (2:219)

அரபுகளிடத்தில் மதுபானம் என்பது அவர்களது வாழ்வில் பழத்தில் சதையோடு ஒட்டிக கொண்டிருக்கும் தோல் போல மிகவும்   ஊடுருவி இருந்தது  இந்த போதையின் தாக்கம் மிகப் பெரும் இழப்பிற்கும் காரணமாகவும்  அமைந்திருக்கின்றது பமதுவிற்காகவே தனது கண்ணியத்தையும் கௌரவத்தையும் இழந்த பல சம்பவங்கள் வரலாறுகளில் காணக் கிடைக்கின்றன அதில் ஒன்று மக்கமாநகரின் காபா என்னும் புனித ஆலயத்தின் சாவி ஒரு கோத்திரத்தாரின் பொறுப்பில் இருந்து வந்தது அந்த கோத்திரத்தின் ஒருவர் மற்றவரோடு மது அருந்திய சமயம் மதுவில் பயன்படுத்தக்கூடிய ஒரு தோலின் மேல் உள்ள ஆவளினால் தனது கோத்திரத்திற்கு கண்ணியத்தை தந்த புனித காபாவின் சாவியை அந்த தோலுக்கு பகரமாக விற்றுவிட்டார்  பிறகு அதனை நினைத்து அளவில்லா கைசேதப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது  (ஷிஃபாவுல் ஃகராம்)

அரபு மக்கள் மிகப்பெரும் மதுப் பிரியர்களாக இருந்தார்கள். குடிக்காமல் இருப்பது ஆண்மைக்கு அழகன்று என்று நினைத்தவர்களும் இருந்தனர். அந்த அளவுக்கு மது என்பது அவர்களின் வாழ்வில் இடம் பிடித்திருந்தது. நபி(ஸல்) அவர்கள் தமது போதனையின் ஆரம்ப கட்டத்தில் மதுவைத் தடை செய்யவில்லை. ஆனால், மதுவின் தீமைகளை உணர்ந்த சிலர் மதுபானம் தடை செய்யப்பட்டால் நல்லது என்று நினைக்கும் நிலையைத் தன் போதனை மூலம் உருவாக்கினார்கள். இதனால் சிலர் தாங்களாகவே வந்து மது பற்றிக் கேட்டார்கள். அப்போது இந்த வசனம் அருளப்பட்டது.

‘(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘அவ்விரண்டிலும் பெரும்கேடும், மனிதர்களுக்கு (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப்பெரியதாகும்’ எனக் கூறுவீராக! மேலும், தாம் எதைச் செலவு செய்வது? என்றும் உம்மிடம் கேட்கின்றனர். ‘(தேவைக்குப் போக) மீதமுள்ளதை’ எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ்  வசனங்களை உங்களுக்குத் தெளிவு படுத்துகின்றான்.’ (2:219)

இதில் மது, சூது இரண்டிலும் நன்மைகள் இருக்கின்றன என்று கூறப்படுகின்றது. விற்பனை மூலம் பொருளாதார நலனை ஒரு கூட்டம் பெறலாம். ஆனால், மது மற்றும் சூது இரண்டிலும் ஏற்படும் பாதிப்புக்கள் அதில் ஏற்படும் நன்மைகளை விடப் பெரியது என்று கூறி மது மீது வெறுப்பு ஏற்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக,

 

    ‘நீங்கள் போதையுடன் இருக்கும் போது தொழுகையை நெருங்காதீர்கள்’ (4:43)

 

என்ற வசனம் அருளப்பட்டது. ஒரு முஸ்லிம் தினமும் ஐவேளை தொழ வேண்டும். தொழும் போது போதையுடன் இருக்கக் கூடாது என்றால் தொழுகைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னராவது குடிப்பதை அவசியம் நிறுத்தியாக வேண்டும். இப்படிப் பார்க்கும் போது அதிகாலை சுபஹ் தொழுகைக்கும், பகல் லுஹர் தொழுகைக்குமிடையில் அவர்கள் குடிப்பதற்கு ஓரளவு நேரம் இருந்தது. இந்நேரம் பணிகளில் ஈடுபடும் நேரமாகும். இஷா தொழுகைக்குப் பின்னர் குடிப்பதற்கு வாய்ப்பிருந்தது. இந்த சட்டத்தைப் போட்டு மதுப் பிரியர்கள் மதுவை விட்டும் தூரமாக்கப் பட்டார்கள்.

அடுத்த கட்டமாக பின்வரும் வசனம் அருளப்பட்டது.

 

‘நம்பிக்கை கொண்டோரே! மதுவும், சூதாட்டமும், (வணக்கத்திற்காக) நடப்பட்டவைகளும், குறிபார்க்கும் அம்புகளும் ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயலிலுள்ளவைகளாகும். எனவே, நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

 ‘ஷைத்தான் விரும்புவதெல்லாம் மது,  சூதாட்டம் என்பவற்றின் மூலம், உங்களுக்கிடையில் பகைமையையும், குரோதத்தையும் ஏற்படுத்தவும், உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், மற்றும் தொழுகையை விட்டும் தடுத்து விடவுமேயாகும். எனவே, நீங்கள் விலகிக்கொள்வீர்களா?’ (5:90-91)

 

மது, சூது மூலம் கோபமும் குரோதமும் ஏற்படுகிறது. இறை நினைவையும், தொழுகையையும் விட்டும் ஷைத்தான் உங்களைத் தூரமாக்குகின்றான். எனவே, இது கூடாது தடை செய்யப்பட்டது. நீங்கள் விலகிக் கொள்வீர்களா? என்ற வசனம் அருளப்பட்டதும் விலகிக் கொண்டோம் விலகிக் கொண்டோம் என முஸ்லிம்கள் மதுவை முழுமையாக ஒழித்தனர். மதீனா வீதியெங்கும் மது ஆறு ஓடியது என்று கூறும் அளவுக்கு மதுப் பீப்பாக்கள் கொட்டிவிடப்பட்டன. மதுபானச் சட்டிகள் உடைக்கப்பட்டன. வாயில் ஊற்றிய மதுவையும் கீழே துப்பினர். இவ்வாறு படிப்படியாகப் போதித்து இஸ்லாம் மது ஒழிப்பில் ஒரு மகத்தான புரட்சியையே ஏற்படுத்தியது.

0Shares